நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்து போராட கஸ்தூரி மஞ்சள்

    கஸ்தூரி மஞ்சள் முக அழகிற்கு மட்டுமல்ல, நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்து போராடவும் செய்கிறது. கஸ்தூரி மஞ்சளிலில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவை என்னவென்று பார்ப்போம். கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமாக இருக்கும். தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் அதிகளவில் உதவுகிறது.

     கஸ்தூரி மஞ்சள் மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளரும். இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகமும் பொலிவு பெரும்.

      பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் வராமல் தடுக்கும். கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தினால் கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுத்து, இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை சரியாகும்.

    கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும். கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் சரியாகும். சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் பாதுகாக்கும்.

Post a Comment

0 Comments